Categories
தேசிய செய்திகள்

படுகொலையான பெண்ணின் குடும்பத்திற்கு ராகுல், பிரியங்கா நேரில் ஆறுதல்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்க காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த 14ம் தேதி நான்கு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் இழந்த இளம் பெண்ணின் உடலை பெற்றோரின் அனுமதியின்றி நள்ளிரவில் போலீசார் அவசரகதியில் எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹத்ராஸில் 144 தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே தள்ளி விட்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்தினரை  சந்திப்பதற்காக திரு ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்பிக்கள் குழு நேற்று மீண்டும் ஹத்ராஸ் சென்றது.

டெல்லி உத்தர பிரதேச எல்லையில் போலீஸாரின் கெடுபிடிக்கு பின்னர் திரு  ராகுல் காந்தி, திருமதி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து ஹத்ராசில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். காங்கிரஸார் வருகையை ஒட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது. பிர்லா கோளரங்கம் முதல் காந்தி சிலை வரை நடைபெற்ற இந்த கண்டன பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Categories

Tech |