பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பெயிண்டரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகனான தங்கராஜ் என்பவர் பெயிண்டராக இருந்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது பெண் உள்பட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். அதன் பின் அவர்கள் பயங்கர ஆயுதங்களால் தங்கராஜின் மார்பு, கழுத்து போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தங்கராஜ் அப்பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்தது தெரியவந்துள்ளது. இதனால் தங்கராஜுக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஒரு நபருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக தங்கராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.