பாகிஸ்தான் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 27 வயதான இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் திகழ்கிறார். சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் கூட இவர் சிறப்பாக பந்துவீசி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக அமீர் 38 டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மட்டுமே அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கவுள்ளன. எனவே இதற்கு பாகிஸ்தான் அணி பல நல்ல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆகவே நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என தெரிவித்தார்.