கர்நாடகா பெலக்காவி மாவட்டத்தில் உள்ள முதனூர் கிராமத்தில் அக்டோபர் 23ஆம் தேதி பழைய கிணற்றிலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் நச்சு கலந்த அசுத்தமான தண்ணீர் கலந்துள்ளது. இதனால் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அசுத்தமான தண்ணீரை பருகிய 94 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். உயிரிழந்தவர் சிவப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நான்கு நாட்களுக்கு முன்பு அசுத்தமான தண்ணீரை பருகியதால் நோய்வாய்ப்பட்டார். மருத்துவமனையில் உள்ள 94 பேரில் 44 ஆண்கள், 30 பெண்கள், 12 சிறுவர்கள் மற்றும் 8 பெண்கள் ஆவர். பாதிக்கப்பட்ட அனைவரும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி என ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருந்தனர். மேலும் கிணற்றில் உள்ள தண்ணீர் மாசுபாட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து முதனூர் கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.