பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்த இந்து குடும்பத்தை சேர்ந்த பதினோரு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட இந்து குடும்பத்தினர் ஒருவர், நீண்ட கால விசா மூலமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள லோட்தா கிராமத்தில் ஒரு பண்ணையை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். அப்பகுதியிலேயே ஒரு குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த 11 நபர்கள் அவர்களது குடும்பத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த கேவல் ராம் (35) என்பவர் மட்டும் உயிருடன் இருந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,11 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஜோத்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள், புதாராம் (75), அவருடைய மனைவி அந்தரா தேவி, மகன் ரவி (31), மகள்கள் ஜியா (25), சுமன் (22), பேரன்கள் முக்டாஷ் (17), நைன் (12), லட்சுமி (40) மற்றும் கேவல் ராமின் 3 மகன்கள் ஆவர்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராகுல் பராத் கூறுகையில், “11 பேரின் மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அவர்கள் மீது ரசாயன வாசனை வீசுவதால், ஏதோ ரசாயனத்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். மற்றபடி உடல்களில் எந்தவிதமான காயமும் இல்லை. முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரியவந்துள்ளது. உயிருடன் இருக்கின்ற கேவல் ராமின் மனைவி, குடும்பத்தகராறு காரணமாக, தனது பெற்றோருடன் ஜோத்பூரில் வசித்து வருகிறார். அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து இவர்களுக்கு மிரட்டல் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த சம்பவம் பற்றி கேவல் ராமிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சனிக்கிழமை இரவு உணவை முடித்த பின்னர், வயலில் விலங்குகள் வந்தால் அதனை விரட்டுவதற்காக தான் அங்கு சென்று உறங்கியதாகவும், காலையில் வந்து பார்த்தபோது 11 பேரும் இறந்து கிடந்ததாகவும் கூறியுள்ளார். 11 பேரின் மர்மமான மரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.