தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நடத்தும் நல்லிணக்க பேச்சுக்கு தலீபான்கள் உதவி வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டில் செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புடன் நல்லிணக்க பேச்சு நடத்துவதாக கூறியுள்ளார். இதுகுறித்து துருக்கி அரசின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது, “தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் சில குழுக்கள் பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர். இதனைத் தொடர்ந்து அவர்களுடன் நல்லினக்கம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மேலும் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிடும் பட்சத்தில் பொதுமன்னிப்பு வழங்கப்படும். அதோடு அவா்கள் சாதாரண குடிமக்களாக வாழ்வதற்கு வழிவகை செய்யப்படும். ஆப்கான் நாட்டின் தலீபான்களும் இந்த பேச்சுவார்த்தைக்கு உதவுகின்றனர். மேலும் ஆப்கானில் தான் இந்த பேச்சுவார்த்தை நடக்கிறது.
குறிப்பாக ஆப்கானில் 20 ஆண்டு போருக்குப் பின் அமெரிக்கப் படை திரும்பி அனுப்ப பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளை தலீபான்கள் கைப்பற்ற தொடர்ந்தனர். இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றினர். அப்போது அங்கு சிறையில் அடைத்து வைத்திருந்த தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினரை தலீபான்கள் விடுவித்தனர். இந்த நிலையில் இவர்களுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே நல்லிணக்கப் பேச்சுக்கு தலீபான்கள் உதவுகின்றனர்” என்று கூறுயுள்ளார்.