பாகிஸ்தான் விமான நிலையத்திற்குள் நுழையும் கொரோனா தொற்றுள்ள விமான பயணிகளை மோப்ப நாய்களை கொண்டு கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டு விமான பயணிகளில் பலர் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என போலியான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு நாட்டிற்குள் நுழைவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறிவதற்காக மோப்ப நாய்களை வரவழைப்பது என முடிவு செய்துள்ளனர். அதன்படி புது இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு மோப்பநாய் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த மோப்ப நாய்கள் மூலம் கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்னரே தொற்று பாதித்த மனிதர்களை கண்டறியும் சக்தியை பெற்றுள்ளது என ஹெல்சின்கி பல்கலை கழகத்தின் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
இதற்காக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பிற நாடுகளில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் கொண்டு தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காண முடியும் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கான செலவும் மிக குறைவாக உள்ளது எனவும் நடைமுறையிலுள்ள பரிசோதனைகளுக்கு மாற்றாக மிக எளிய முறையாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.