காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்ததன் மூலம் நீக்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்றன. போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றை பாகிஸ்தான் முடக்கிக்கொண்டது.
இந்தச் சூழலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். எனவே, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்தி சவுதி அரேபியாவிற்கு செல்ல இந்திய தரப்பு பாகிஸ்தானிடம் அனுமதி கேட்டது. ஆனால், காஷ்மீர் பிரச்னையை காரணம் காட்டி பாகிஸ்தான் அரசு மோடியின் விமானத்திற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அந்நாடு அனுமதி மறுத்திருந்தது.