பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.இத்தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தா ன் சென்றடைந்தது.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடக்கை சுழற்பந்து வீச்சாளரும்,ஆல்-ரவுண்டருமான ஆஷ்டன் அகரு-க்கு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானது .ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.மேலும் ஆஷ்டன் அகரின் மனைவிக்கு சமூக வலைதள பதிவு மூலமாக “உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் அவர் உயிருடன் நாடு திரும்ப மாட்டார்” என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ‘அந்த சமூக வலைதள பதிவு குறித்து நாங்கள் அறிவோம். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு,ஆஸ்திரேலியா கிரிக்கெட் மற்றும் இரு நாட்டு அரசு பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றன.இது போன்ற சமூக வலைதள பதிவை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. இப்போதைக்கு இதுபற்றி வேறெதுவும் சொல்வதற்கு இல்லை” என தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பாகிஸ்தானில் உள்ள தாங்கள் மிகவும் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.