பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் வீரர் அன்வர் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று வந்த , 6 வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டியில், ஒருசில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் அபுதாபியில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் அனைவரும் ,கராச்சி மற்றும் லாகூரில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று அபுதாபிக்கு செல்ல உள்ளனர். அங்கு சென்று அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் .
இதனால் அபுதாபிக்கு செல்லும் முன்பாக லாகூர் மற்றும் கராச்சியில் உள்ள ஹோட்டல்களில் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில் பாகிஸ்தான் அணி வீரரும் , குயிட்டா கிளாடியட்டர்ஸ் அணியில் விளையாடுபவருமான அன்வர் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட அவர், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் விளையாட அபுதாபிக்கு செல்லமுடியாது.