ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், தலீபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் விமான படை தான் உதவுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே பல வருடங்களாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அமெரிக்கா, தங்கள் படைகளை அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாக களமிறக்கியது. எனினும் தலீபான்கள் தங்கள் நாட்டிலிருந்து பிற படைகள் வெளியேறுமாறு அமைதி பேச்சுவார்த்தையில் கோரினார்கள்.
எனவே அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறி வருகிறது. இதனால் மீண்டும் நாடு தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் துணை அதிபரான அமருல்லா சலே, தன் ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் நடந்துவரும் மோதலில் பாகிஸ்தான் விமான படையினர் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, காந்தஹார் மாகாணம், ஸ்பின் போல்டக் பகுதிகளை தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்ற முயற்சிக்க கூடாது என்று பாகிஸ்தான் விமானப்படையினர் எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தலிபான் தீவிரவாதிகளுக்கு, எங்களின் விமானப்படை ஆதரவளிப்பதாக கூறுகிறார்கள். இது, ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதிக்காக முயற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தானை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆப்கானிஸ்தானின் துணை அதிபர், பாகிஸ்தானின் அறிக்கையை ஏற்கவில்லை.
பாகிஸ்தான், தலிபான் தீவிரவாதிகளுக்கு நாங்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று ஏமாற்றி வருகிறார்கள். இந்த பிரச்சனை குறித்து நன்கு அறிந்தவர்களுக்கு, பாகிஸ்தான் இவ்வாறு தான் பேசுவார்கள் என்று முன்பே தெரிந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.