Categories
உலக செய்திகள்

”எங்களையும் கூப்பிடுங்க” காத்திருக்கும் பாகிஸ்தான் …!!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவின் அழைப்புக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 19ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து உறுப்பு நாடுகளையும் அழைக்கப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அழைப்புக்காகப் பாகிஸ்தான் காத்திருப்பதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ.) கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தானை மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கும் பட்சத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இந்தியா வருவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைப்பாட்டை மறைமுகமாகத் தாக்கிப் பேசினார்.

முன்னதாக, இந்த மாநாடு குறித்து வியாழக்கிழமை (ஜன.16ஆம் தேதி) கருத்து தெரிவித்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் அனைத்துத் தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு ஒரு சர்வதேச அரசு அமைப்பு. இந்த அமைப்பில் எட்டு நாடுகள் உள்ளன. அந்நாடுகள் முறையே சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவை ஆகும். இதுதவிர ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ​​ஈரான், மங்கோலியா ஆகிய நான்கு உறுப்பு நாடுகளும் ஆர்மீனியா, அஜர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி ஆகிய கூட்டு நாடுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |