பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் காஷ்மீரில், கொண்டுவரப்படும் மாற்றங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அதன் சிறப்பு அந்தஸ்து ரத்தானது. எனவே அரசியல் தலைவர்களை ஆர்ப்பாட்டம் நடத்தாமல் இருக்க வீட்டுச்சிறையில் வைத்து, விடுவித்தனர்.
இந்நிலையில் காஷ்மீரின் சட்டசபை தேர்தலை இந்த வருட டிசம்பர் அல்லது அடுத்த வருடம் மார்ச்சில் நடத்துவதற்கு மத்திய அரசு விரும்புவதால் பிரதமர் மோடியின் தலைமையில் வரும் 24 ஆம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
இதில் கலந்து கொள்ள காஷ்மீரின் 8 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 14 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் மேற்கொள்ளப்படும் எந்த மாற்றத்திற்கும் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா முகமது குரோஷி கூறியிருக்கிறார். மேலும் காஷ்மீரில் சட்டவிரோதமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.