ஜம்மு காஷ்மீரில், குப்வாரா மாவட்டத்தின் ரங்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. குப்வாரா, பூஞ்ச் மற்றும் கதுவா மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.
பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியையொட்டி உள்ள கஸ்பா, கிர்னி செக்டார்களில் பிற்பகல் 1.40 மணி முதல் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. சிறிய ரக பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் அந்நாட்டு ராணுவத்தினா் தாக்குதல் நடத்திய நிலையில், அவா்களுக்கு இந்திய ராணுவம் உரிய முறையில் பதிலடி கொடுத்தது.
பூஞ்ச் மாவட்டம் கஸ்பா செக்டாரில் உள்ள ஒரு வீட்டின் அருகே பாகிஸ்தான் ராணுவம் வீசிய குண்டு வெடித்து முகமது ஷெளகத் (28) என்பவா் காயமடைந்ததையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அச்சத்தில் நாடு மட்டும் அல்லாது உலகமே அல்லாடி வரும் நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்திய எல்லை மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது அனைவரின் கண்டனத்தை பெற்றுள்ளது.