பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர், டிக் டாக் செயலியில் இந்தி பாடலுக்கு இளம் பெண் ஒருவருடன் வாயசைத்து வீடியோ வெளியிட்டதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான யாசிர் ஷா, இதுவரை 35 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 67 இன்னிங்ஸில் விளையாடி 203 விக்கெட்டுகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில், 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்றது. இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷாவும் இடம்பெற்றிருந்தார்.
யாசிர் ஷா, துபாயில் இளம் பெண் ஒருவருடன் டிக் டாக் செயலியில் இந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வந்த கிரிக்கெட் வாரியம், இனி இதுபோன்ற செயல்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் யாசிர் ஷா சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டதில், துபாய், மால் ஒன்றில், டிக் டாக் செயலியை சார்ந்த ஊழியர்கள், ஒரு பாடலுக்கு வாயசைக்கும்படி யாசிர் ஷாவிடம் கேட்டுக்கொண்டனர். முதலில் யாசிர் ஷா மறுப்புத் தெரிவித்தார். அதன் பின் அவர்கள் வற்புறுத்தியதால் அவர் சம்மதம் தெரிவித்தார். இதுதான் நடந்தது’ என்று அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதே போன்று துபாயில் நடந்த பிரபல அமெரிக்க பாடகர் அகோனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மல் அது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதுவும் தற்போது வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/ThakurHassam/status/1112734738450710529