பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எல்லை தாண்டி வந்து உதவுவதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் முதல் துணை அதிபர் அம்ருல்லா சலே தலீபான் பயங்கரவாதிகள் அந்நாட்டின் அரசுக்கு எதிராக ஈடுபட்டு வரும் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உதவுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறை அந்நாட்டை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து தலீபான்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தானை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அதில் டஜன் கணக்கான ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தானின் பயங்கரமான உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை சேர்ந்த அதிகாரிகள் வந்துள்ளதாகவும், சுமார் 7000 லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் உளவுத்துறை அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு படைகளுக்கு எதிராக தலீபான்களுடன் இணைந்து சண்டையிடுவதாக தகவல் தெரிவித்துள்ளது.