பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள , 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்து கோவிலை மர்ம நபர்கள் சூறையாடி உள்ளனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில், ராவல்பிண்டி நகரிலுள்ள சுமார் 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒரு மாத காலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் , இந்த கோவிலிலுள்ள சாமி சிலைகள் அனைத்தும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் இந்த கோவிலில் தினசரி நடைபெறும் பூஜைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, 15 பேர் கொண்ட கும்பல் மாலை நேரத்தில் இந்த கோவிலுக்குள் தடையை மீறி நுழைந்து ,கோவிலை அடித்து நொறுக்கியது.
இந்தக் கோவிலில் மேல் தளத்தில் உள்ள கடைகளை அடித்தும் ,மாடிப்படிகளை கீழே தள்ளியும் சூறையாடினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகத்தினர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கோவிலின் புனிதத் தன்மையை சேதப்படுத்திய, மர்ம நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு முன் கோவிலில் புனரமைப்பு பணிகள் தொடங்குவதற்காக, கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மாவட்ட நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். இதனால் அந்த ஆக்கிரமிப்பு இடத்தை சேர்ந்த கும்பல் கோவிலை சூறையாடி இருக்கலாம்,என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.