பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் ‘தி ஹேரக்ஸ்’ என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி கல்வித்துறையை அணுகி புகார் மனு அளித்தார். அந்த புகாரில், “தான் பணியாற்றி வரும் தனியார் பள்ளியின் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தியிருப்பதை பார்த்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.
பின்னர், உடனடியாக அப்பள்ளிக்கு சென்ற கல்வித்துறை அதிகாரிகள், கழிவறையில் சோதனை செய்தனர். அப்போது, ஆண் மற்றும் பெண் மாணவர்கள் கழிவறைகளின் சுவற்றில், ஷீட்களுக்கு பின்னும், வாஷ்பேசின் அருகேயும் ரகசிய கேமராக்கள் பொருத்தபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தவிர ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறையிலும் ரகசிய கேமரா பொருத்தி இருந்தது.
இந்த கேமராக்கள் மூலம் எடுத்த வீடியோக்கள் பதிவுகளையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அளித்த கல்வித்துறை, நவம்பர் 4 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால் பள்ளி நிர்வாகிகள் யாரும் ஆஜர் ஆகாததால், விசாரணை முடியும் வரை பள்ளியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.