பாகிஸ்தான் மந்திரி இலங்கை நபர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சர்ச்சைக்குரிய பதிலை செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமரா என்பவர் பாகிஸ்தானின் சைலகோட் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த தொழிற்சாலையின் வெளி சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்றை குமரா கிழித்து எறிந்துள்ளார். அதாவது அந்த சுவரொட்டியில் இஸ்லாமிய மதம் சார்ந்த வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், தெக்ரிக் – இ – லெப்பை பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்தவர்கள் அந்த சுவரொட்டியை ஒட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களும் தெக்ரிக் – இ – லெப்பை அமைப்பினரும் பிரியந்தா குமரா தங்களது மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி அவரை தாக்கியுள்ளனர். அதன் பிறகு அந்தத் தொழிற்சாலைக்கு வெளியே சாலையில் குவிந்த 800-க்கும் மேற்பட்டோர் பிரியந்தா குமராவை மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் பிரியந்தா குமராவை அந்த கும்பல் நடுரோட்டில் தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளது. இந்த கொலை சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கொலை செய்யப்பட்ட குமாராவின் உடல் இன்று இலங்கை நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் மந்திரி இது போன்ற கொலை சம்பவம் எப்போதும் நடப்பது தான். இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்டது “இளமையின் குதூகலம்” என்று கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி பர்வேஷ் ஹடகிடம் இலங்கை நபர் எரித்துக்கொல்லப்பட்டது தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த பர்வேஷ் “இது போன்ற சம்பவம் எல்லா நேரத்திலும் நடக்கும். இது இஸ்லாமிய இளைஞர்களின் இளமை குதூகலம்” என்று கூறியுள்ளார். மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் மதத்தை ஒருவர் இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை செய்து விட்டனர் என்று சர்ச்சைக்குரிய பதிலை தெரிவித்துள்ளார்.