நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறையினர் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணையை மேற்கொள்ள பஞ்சாப் மாகாண காவல்துறைக்கு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்திரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ய பஞ்சாப் மாகாண காவல்துறை மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து இம்ரான்கான் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், உள்துறை மந்திரி ரானா சனாவுல்லா மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் பைசல் நசீர் ஆகியோரின் பெயர் இருப்பதால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் தானாக முன்வந்து விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 24 மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு நேற்று முன்தினம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் பஞ்சாப் மாகாண காவல்துறை இந்த சம்பவம் குறித்து நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும் இந்த வழக்கில் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்ட நவீத் முகமது பஷீரை முதன்மை குற்றவாளியாக குறிப்பிட்டுள்ளதாகவும், பிரதமர், உள்துறை மந்திரி மற்றும் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக இம்ரான்கான் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.