பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மூலம் அச்சுறுத்தல் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தால் ஏற்பட்ட இழப்புகளை பட்டியலிட்டுள்ளது. நாடுகள் கடந்த பயங்கரவாதம் மனித சமூகத்திற்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கையை நடத்தி வருவதாக இந்திய சாடியுள்ளது.
பாகிஸ்தானில் தங்கிக் கொண்டு ஆயுதம் கடத்தல், தங்கம் கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடுவது என இந்தியாவிற்கு எதிராக தாவூத் செயல்படுவதாக இந்தியா கூறியுள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகள் முலம் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதாக அறிக்கையில் இந்தியா குறிப்பிட்டுள்ளது. எனவே தீவிரவாதிகளுக்கு நிதி உதவி அளிக்கக்கூடாது என்ற ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றிய முந்தைய தீர்மானங்களுக்கு பாகிஸ்தான் மதிப்பு கொடுக்கவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.