Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvENG : முதல் டெஸ்ட் போட்டி….. 74 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அசத்தல் வெற்றி..!!

முதலாவது டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து..

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 1ஆம் தேதி முதல் ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 101 ஓவரில் 657 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 153 ரன்களும், சாக் கிராலி 122 ரன்களும், ஒல்லி போப் 108 ரன்களும்,  பென் டக்கெட் 107 ரன்களும் எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 136 ரன்களும், இமாம் உல் ஹக் 121 ரன்களும், அப்துல்லா ஷபீக் 114 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் இருந்த இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸில் அதிரடியாக 35.5  ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்தது, இதனால் பாகிஸ்தானுக்கு 343 ரன்கள் எடுத்தால் வெற்றியென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்க்ஸ் ஆடிய பாகிஸ்தான் 4ஆவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தது.. இமாம் உல் ஹக் 43 ரன்களுடனும், சவுத் ஷகீல் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்..

பாகிஸ்தான் வெற்றிக்கு மேலும் 223 ரன்கள் தேவை என்ற நெருக்கடியான கட்டத்தில் 5ஆவது மற்றும் கடைசி நாளான நேற்று பாகிஸ்தான் பேட்டிங் ஆடியபோது சிறிது நேரத்தில் இமாம் உல் ஹக் 48 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பின் 4ஆவது விக்கெட்டுக்கு சவுத் ஷகீலும், விக்கெட் கீப்பர் முகம்மது ரிஸ்வானும் ஜோடி சேர்ந்து ஓரளவு ரன்கள் சேர்த்து வந்தனர்.

30 ஓவர்கள் வரை தாக்கு பிடித்த இந்த ஜோடி முக்கியமான நேரத்தில் பிரிந்தது. அணியின் ஸ்கோர் 176 என இருந்தபோது ரிஸ்வான் 46 ரன்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து சவுத் ஷகீல் 76 (159) ரன்களில் ராபின்சன் ஓவரில் வெளியேறினார். அதன்பின் விரலில் காயம் ஏற்பட்ட காரணத்தால் முந்தைய நாள் வெளியேறி இருந்த அசார் அலி மற்றும் அஹா சல்மான் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க பாகிஸ்தானுக்கு நம்பிக்கை கிடைத்தது. ஆனால் தேனீர் இடைவெளிக்கு பின் 41 ஓவர்களில் பாகிஸ்தான் வெற்றிக்கு 86 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

நம்பிக்கையுடன் ஆடி வந்த இந்த ஜோடியை வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் பிரித்தார். அஹா சல்மான் 30 ரன்களிலும், அசார் அலி 40 ரன்களிலும் வெளியேறினர். பாகிஸ்தான் 260/7  ரன்கள் என இருந்தது கடைசியில் தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் பேட்டர்கள் ரன்கள் எடுக்க முயலாமல் தடுத்து ஆட ஆரம்பித்தனர். இருப்பினும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்  பேட்ஸ்மேன்களை சுற்றி வளைத்து பீல்டர்களை நிறுத்தி நெருக்கடி கொடுத்து மிரட்ட ஜாஹித் மஹ்மூத் (1), ஹாரிஸ் ரவூப் (0) இருவரும் ஆண்டர்சனின் ஓவரில் அடுத்தடுத்து அவுட் ஆகினர்..

இறுதியில் கடைசி 10ஆவது விக்கெட்டுக்கு நசீம் ஷா மற்றும் முகமது அலி இருவரும் சேர்ந்து இருக்கும் கொஞ்ச நேரத்தை எப்படியாவது கடத்திவிட வேண்டும் என சமாளித்து 8 ஓவர்கள் வரை திறமையாக சமாளித்தனர். அதன் பின் தாக்குப் பிடிக்க முடியாமல் நசீம் ஷா 6 ரன்கள் (46 பந்து) எடுத்த நிலையில் ஜாக் லீச் சுழல் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் டி.ஆர்.எஸ்-ன் படி அப்பீல் செய்தும் பலன் கிடைக்கவில்லை..

இறுதியில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 96.3 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி சார்பில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஆலி ராபின்சன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். ராபின்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 : 0 என்ற கணக்கில் முன்னிலையுடன் உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது  என்பதால் இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகள் கிடைத்துள்ளது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி முல்தானில் தொடங்குகிறது..

Categories

Tech |