ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஷ்வான் களமிறங்கினர். இஷான் கான் வீசிய 3ஆவது ஓவரில் 4ஆவது பந்தில் பாபர் அசாம் 9(8) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் பக்கர் ஜமான் – ரிஷ்வான் ஜோடி சேர்ந்தனர்.. இருவரும் பொறுப்பாக அடித்து அற்புதமாக ஆடி வந்தனர். முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.. அதேபோல பக்கர் ஜமாமானும் 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்த நிலையில், 17 வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஸ்வான் – குஷ்தில் ஷா இருவரும் இணைந்தனர்.. கடைசி கட்டத்தில் குஷ்தில் ஷா அதிரடியாக விளாசினார்..
குறிப்பாக ஆட்டத்தின் கடைசி 20ஆவது ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் விளாசினார். அந்த ஓவரில் 4 சிக்ஸர் ஒரு வைட் பவுண்டரி என மொத்தம் 29 ரன்கள் வந்தது.. இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.. முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 15 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட 35 ரன்களுடனும் ஆட்டமிழக்காம்ல் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் நிசாகத் கான் மற்றும் யாசிம் முர்தசா ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியது. நஸீம் ஷா வீசிய 3ஆவது ஓவரின் முதல் பந்தில் நிசாகத் கான் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரின் கடைசி பந்தில் பாபர் ஹயாத் 0 ரன்களில் வெளியேறினார். அதன்பின் வந்த ஒரு வீரரும் நிலைத்து நிற்கவில்லை.. யாருமே 10 ரன்கள் கூட தாண்டவில்லை.
யாசிம் முர்தசா 2, கிஞ்சித் ஷா 6, அய்சாஸ் கான் 1, ஜீஷன் அலி 3, அர்ஷத் முகமது 3, ஸ்காட் மெக்கெக்னி 4, ஆயுஷ் சுக்லா 1, முகமது கசன்பர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். இஷான் கான் 0 ரன்னில் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 4 விக்கட்டுகளும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளும், நசீம் ஷா 2 விக்கெட்டுகளும், ஷாநவாஸ் தஹானி 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனால் ஹாங்காங் அணி 10.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 38 ரன்கள் மட்டுமே அடித்து படுதோல்வியை சந்தித்தது.. பாகிஸ்தான் அணி இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தான்- இந்தியா அணிகள் மோத இருக்கிறது.