சிட்னியில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்படுகிறது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக ஆடிய ஹாரிஸ் 11 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 28 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து பாபர் அசாம் 6, சான் மசூத் 2 என அடுத்தடுத்து சொற்ப ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். பாகிஸ்தான் அணி 6.3 ஓவரில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இப்திகார் அகமது- முகமது நவாஸ் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். இதையடுத்து நவாஸ் 28 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து 13ஆவது ஓவரிலிருந்து சதாப்கான் மற்றும் இப்திகார் அகமது ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சதாப்கான், இப்திகார் அகமது இருவரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சிதறடித்தனர்.இருவரும் அரைசதம் அடித்தனர்.
இதைடுத்து சிறப்பாக ஆடிய சதாப்கான் 19வது ஓவரில் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து 20ஆவது ஓவரில் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 51 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. நசீம் ஷா 5, ஹாரிஸ் ரவூப் 3 ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். தென்னாபிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக அன்ரிச் நார்ட்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீரர்களாக டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். இதில் ஷாகின் அப்ரிடி வீசிய முதல் ஓவரில் டி காக் டக் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ரூஸோவ் அதே சாகின் அப்ரிடி ஓவரில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டெம்பா பவுமா மற்றும் ஐடன் மார்க்ரம் இருவரும் சேர்ந்து சிறிது நேரம் சிறப்பாக விளையாடினர்.
அதன்பின் 19 பந்துகளில் (1 சிக்ஸ், 4 பவுண்டரி) 36 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிவந்த பவுமா, சதாப் கான் வீசிய 8ஆவது ஓவரில் அவுட் ஆனார். தொடர்ந்து அதே ஷதாப் ஓவரில் மார்க்ரம் 20 ரன் எடுத்தபோது போல்டாகி வெளியேறினார். தென் ஆப்பிரிக்கா அணி 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து கிளாசன் (2) ஸ்டெப்ஸ் (2) இருவரும் ஆடிவந்த நிலையில் மழை வந்தது. இதனால் 9 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டது. தென்னாபிரிக்க அணி 69 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்தது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 14 ஓவரில் 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென்னாபிரிக்க அணிக்கு 5 ஓவரில் 73 ரன்கள் தேவைப்படும் நிலையில் ஆடி வருகின்றனர்.