தர்மபுரி மாவட்டத்தில் மொரப்பூரியல் பால் கொள்முதல் நிறுத்தப்படுவதை கண்டித்து விவசாயிகள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். ஏற்கனவே பாலை குறைத்து வாங்குவதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வரும் விவசாயிகள், முழுமையாக பால் கொள்முதல் செய்ய வலியுறுத்தி பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தர்மபுரி மாவட்ட ஆவின் நிர்வாகம் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யும் அளவை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால், லிட்டருக்கு 100 மில்லி பால் திருப்பி அனுப்பப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் பால் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.