சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் மற்றும் மீனாட்சி நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், கீழக்குறிச்சி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளார். அவரை நம்பி ஏராளமான பெண்கள் பணத்தை செலுத்தினோம்.
இந்நிலையில் சீட்டு முடிவடைந்த பிறகு பலமுறை கேட்டும் அந்த பெண் பணத்தை தராமல் ஏமாற்றிவிட்டார். பல லட்ச ரூபாய் வரை மோசடி செய்த அந்த பெண் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். எனவே அந்த பெண்ணை பிடித்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.