ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி விட்டதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி இருக்கிறார்.
நிதி பற்றாக்குறையை சமாளிக்க மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியிருப்பது பலனளிக்காது என்று அவர் கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியிடமிருந்து மாநிலங்கள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கடன் வாங்க முடியும் என்பதை சுட்டி காட்டியிருக்கும் நாராயணசாமி பல மாநிலங்கள் ஏற்கனவே இந்த அளவை எட்டி விட்டதாக கூறியிருக்கிறார்.
எனவே மத்திய அரசு பொறுப்பேற்று ரிசர்வ் வங்கியிடமிருந்து கடனைப் பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எட்டப்படாத நிலையில் வரும் 12ஆம் தேதி மீண்டும் நடைபெற இருக்கும் கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று முந்தினம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் வெறும் இருபதாயிரம் கோடி ரூபாயை பகிர்ந்தளித்து இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில் புதுச்சேரிக்கு 64 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் புதுச்சேரிக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 879 கோடி ரூபாய் இருப்பதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.