முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா போன்றோர் அடங்கிய அமர்வு, “சென்ற 30 வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரும் உச்சநீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்” என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் நளினி செய்தியாளர்களிடம் பேசியதாவது, சிறையிலிருந்த 32 வருடங்களில் நான் எந்தவொரு தவறும் செய்ததில்லை. சிறையிலிருந்த நேரத்தில் பல்வேறு தடைகளுடனே 6 ஆண்டு உயர்கல்வி படித்து முடித்தேன். அத்துடன் சிறையில் இருந்த போது தையல், ஓவியம், புடவை டிசைன், கைவினை பொருட்கள் செய்வது ஆகிய பல சுயதொழில்களை கற்றுக்கொண்டேன். மத்திய மற்றும் மாநில அரசுக்கும், தமிழகமக்கள் எங்கள் மீது செலுத்திய அன்பிற்கும் நன்றி. ஒரு மாத காலம் சிறைவிடுப்பு(பரோல்) வழங்கிய முதலமைச்சருக்கும் நன்றி. அத்துடன் கணவரை மீட்டெடுக்க முதல்வருக்கு கோரிக்கை. அனைவரும் உதவிசெய்ய வேண்டும்” என்று கூறினார்.