கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அடுத்த பல தலைமுறைகளுக்கும் நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து கடந்து இருக்கின்றது, கொரோனாவால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கோடியே 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 48,600 பேர் உட்பட 48,62,000 பேர் தற்போது வரை பாதிப்படைந்துள்ளனர். அதே சமயத்தில் 1,58,900 பேர் பலியாகியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பிரேசிலில் 27 லட்சத்து 51 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 8 லட்சத்து 56 ஆயிரம் பேரும், தென்னாப்பிரிக்காவில் 5 லட்சத்து 16 ஆயிரம் பேரும் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய அதனோம் கூறுகையில், கொரோனா பற்றி அறிவியல் பூர்வமான பல்வேறு கேள்விகளுக்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை.
இதுவரை இல்லாத வேகத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருந்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும். இப்படிப்பட்ட தொற்று நோய் ஒரு நூற்றாண்டில் ஒரு முறை வரும் சுகாதார நெருக்கடி ஆகும். இதனுடைய விளைவுகள் பல தலைமுறைகளுக்கு உணரப்படும் என்றும், அதுவரை கொரோனாவோடு வாழ்ந்துகொண்டே அதனுடன் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.