பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடை பெறாமல் இருப்பதால் கோவில் பழமை மாறாது புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி 1 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் ராஜகோபுரம் பழமை மாறாது புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே தெப்ப மண்டபம் அமைக்கும் பணி குறித்து 12.50 லட்சம் ரூபாயும், மதில்சுவர் புரனமைக்க 10 லட்சம் ரூபாயும், வடக்கு வாசல் மண்டபம் அமைக்க 10 லட்சம் ரூபாயும், தெப்பகுளம் கிழக்கு மண்டபம் புனரமைக்க 7.50 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்துவதற்கு 5 லட்சம் ரூபாயும், அம்மன் சன்னதி கொடிமரம் அமைப்பதற்கு 40 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1.85 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத் துறை அமைச்சரிடம் எடுத்துக்கூறி பணிகளை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது மராமத்து பொறியாளர் அய்யப்பன், கோவில் மேலாளர் மோகன் குமார், திமுக நிர்வாகிகள் ஜெயதேவர், நகர செயலாளர் மணி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று திருவட்டார் தினசரி சந்தையில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு அங்கு மேற்கூரை, கழிப்பறை, குடிநீர் வசதி, மற்றும் மீன் பதப்படுத்தும் கிட்டங்கி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நவீன சந்தையாக மாற்றுவதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் இந்த பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அப்போது உதவி இயக்குனர் சனல் குமார், செயல்அலுவலர் ஜான்சன், கண்காணிப்பாளர்கள் ராமதேவி, காட்டாத்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜூ மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.