35 ஆண்டுகள் பழமையான வீட்டை ஊழியர்கள் எந்த விரிசலும் ஏற்படாமல் ஐந்து அடி உயரத்திற்கு தூக்கி கட்டியுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் கலைஞர் நகர் 9வது தெருவில் ராமகிருஷ்ணன்- பிரீத்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அந்த தெருவில் பலமுறை மாநகராட்சி சார்பில் சாலைகள் போடப்பட்டுள்ளது. மேலும் இவரின் வீட்டிற்கு அருகே புதியதாக வீடுகளும் கட்டப்பட்டன. இதனால் இந்த தம்பதியினரின் வீடானது தாழ்வானது. அதிலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையினால் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதன் காரணமாக அவர்கள் வீட்டுக்குள் வசிக்க முடியாமலும் வெளிவர முடியாமலும் சிக்கித் தவித்து வந்துள்ளனர். இதனால் அவர் வீட்டை 5 அடி உயரத்திற்கு தூக்கி கட்ட விரும்பியுள்ளார். இதற்காக கோயம்பேட்டில் உள்ள பாட்னாவைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணர்களால் செயல்படும் தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தரையை சுமார் 5 அடி உயரத்திற்கு தூக்கி கட்ட முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் 45 ஜாக்கிகளை கொண்டு 40 ஊழியர்கள் உதவியுடன் வீட்டின் கட்டிடத்தை அறுத்து எடுத்து கான்கிரீட் போட்டுள்ளனர்.
குறிப்பாக வீட்டின் பழமை மாறாமலும் எந்தவொரு விரிசல் ஏற்படாமலும் வீட்டை 5 அடி தூக்கி கட்டியுள்ளனர். இது குறித்து வீட்டின் உரிமையாளரான ராமகிருஷ்ணன் கூறியதில் “நான் வாழ்ந்து வந்த வீட்டை அதன் பழமை மாறாமல் கட்டுவதற்கு 40,00,000 ரூபாய் செலவாகும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது ஊழியர்கள் பழமை மாறாமல் வீட்டை 5 அடி உயரத்திற்கு தூக்கி கட்டியுள்ளனர். மேலும் வீடானது புதிய தொழில்நுட்பத்துடன் 2௦% செலவுடன் கட்டி முடிக்கப்பட்டது” என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.