அரசு டவுன் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கு தினசரி காலை 8.30 மணிக்கு சி-6 என்ற வழித்தட எண் கொண்ட அரசு டவுன் பேருந்து சென்று வருகிறது. இந்த பேருந்து எல்லக்காடு, சிறுக்களஞ்சி வழியே ஊத்துக்குளிக்கு காலை 9.50 மணிக்கு சென்றடையும். இதனையடுத்து இந்த பேருந்து அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு சென்னிமலைக்கு வந்தடைகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊத்துக்குளியிலிருந்து காலை 10 மணியளவில் புறப்பட்டு சென்னிமலைக்கு வரும் அந்த டவுன் பேருந்து இயக்கப்படாமல் இருந்தது. அதன்பின் தற்போது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட பிறகும் அந்த பேருந்து வராமல் இருந்தது.
இது தொடர்பாக போக்குவரத்துதுறை அதிகாரிகளிடம் அந்த பேருந்தை இயக்ககோரி அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டனர். எனினும் தொடர்ந்து அந்த பேருந்தானது சென்னிமலைக்கு வராமலேயே இருந்தது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் சென்னிமலை- ஊத்துக்குளிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த அந்த பேருந்தை எல்லக்காடு என்ற இடத்தில் சிறைப்பிடித்தனர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது நாளை மறுநாள்( வெள்ளிக்கிழமை) முதல் சம்பந்தப்பட்ட பேருந்து காலை 10 மணிக்கு ஊத்துக்குளியில் இருந்து புறப்பட்டு சென்னிமலை வரை இயக்கப்படும் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் சிறைபிடித்த அந்த பேருந்தை சுமார் ஒரு மணிநேரம் கழித்து விடுவித்தனர்.