லாரி- கார் மோதிய விபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈஞ்சம்பள்ளி முத்துகவுண்டன்பாளையம் பி.கே.எஸ். நகரில் மோகன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்தார். இவருடைய உறவினரான மோகனசுந்தரம்-தெய்வானை என்ற தம்பதியினர் ஈஞ்சம்பள்ளி தானத்துபாளையத்தில் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு மஞ்சுளா (எ) புவனேஸ்வரி என்ற மகள் இருந்தார். இந்நிலையில் மோகன்குமார், தேன்மொழி, இவரது தம்பி குமரேசன், தெய்வானை, மஞ்சுளா மற்றும் இவர்களது உறவினர்களான குளூரை சேர்ந்த சக்திவேலின் மனைவி அருக்காணி, தானத்துப்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி ஆகியோர் வாடகை கார் மூலமாக பழனி கோவிலுக்கு சென்றனர்.
அந்த காரை மஞ்சகாட்டுவலசு பகுதியை சேர்ந்த படையப்பா என்ற பிரகாஷ் ஓட்டினார். இந்நிலையில் அனைவரும் பழனிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஈஞ்சம்பள்ளி நோக்கி அதே காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இதனையடுத்து கார் சிவகிரி அருகே பாரப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஈரோட்டிலிருந்து சிமெண்டு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் லாரியும்- காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி துடித்தனர்.
இவர்களில் கார் டிரைவரான படையப்பா இருக்கையில் இருந்தபடியே இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். அதுமட்டுமின்றி தேன்மொழி, தெய்வானை, அவரது மகள் மஞ்சுளா, அருக்காணி ஆகிய 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அப்போது அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குமரேசன், முத்துசாமி, மோகன்குமார் ஆகியோரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த படையப்பா, தேன்மொழி, தெய்வானை, மஞ்சுளா, அருக்காணி ஆகியோரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான காசிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.