சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறுமுக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை உள்ளிட்ட 22 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். மேலும் 3 முறை மாவட்ட ஆட்சியர்களிடம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.