Categories
மாநில செய்திகள்

குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!

ஜூன் 12ம் தேதி குருவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் நடப்பாண்டில் சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விவசாயிகள் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என அறிவித்துள்ள முதல்வர், குறுவை சாகுபடிக்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் உள்ளது.

மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீரின் அளவு 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட போதுமானதாக இருக்கும். தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் தொடங்கும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது என்று கூறிய முதல்வர், டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் விதைகள் மற்றும் உரங்கள் தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |