சேலம் எடப்பாடியில் கொரோனா நிவாரண பொருட்களை முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்திற்கு நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார்.
இன்று காலை சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அதில், அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மவடாக சேலம் மாறியுள்ளது. சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 35 பேரும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர். தற்போது, சேலத்தில் வெளிமாநிலம், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்குத்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 67 பரிசோதனை நிலையங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 41 அரசு பரிசோதனை நிலையங்களும், 26 தனியார் பரிசோதனை நிலையங்களும் உள்ளன. நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், மருத்துவ நிபுணர்களின் அறிவுரைப்படி தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ரேஷன் கடைகள் மூலம் பயன்பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என பல்வேறு தகவல்களை பகிர்ந்தார்.பின்னர் பயணியர் மாளிகையில் அதிமுக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நிவாரண தொகுப்பு பொருட்களான 5 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகியவற்றால் வழங்கினார். கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று விவரங்களை கேட்டறிந்தார்.