திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள திருப்பூர் மருத்துவக்கல்லூரியின் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. கடந்த ஆண்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லுரிகளை தொடங்க மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு பெற்றது.
இதையடுத்து, மருத்துவக்கல்லூரிகள் தொடங்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் படிப்படியாக நடைபெற்றது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மற்றும் பல்வேறு அரசு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஓரளவு ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன் காரணமாக திருப்பூர் மருத்துவக்கல்லூரி கட்டும் பணிகளை தொடங்க முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
இந்த மருத்துவக்கல்லுரிக்கு 60% பங்களிப்பை மத்திய அரசு தருவதாக தெரிவித்திருந்தது. அதன்படி, ரூ.195 கோடி ரூபாயை நிதியை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், 150 மருத்துவ மாணவர் சேர்க்கையுடன் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளது.