கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் நிறுவன கூட்டமைப்புகளுடன் நடத்தி வரும் ஆலோசனையில், அவர்களிடன் குறைகளை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு மாலை 6 மணிக்கு மக்களிடையே முதல்வர் உரையாற்றினார்.
அதன்பின்பு இன்று காலை கோவை வந்தடைந்த முதல்வர், தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், இன்று வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அத்திக்கடவு அவினாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அதில், 115 கி.மீ தொலைவில் பிரம்மாண்ட பைப்லைன் அமைக்கும் பணிகள், பெருந்துறை அருகே 30 மெ.வாட்ஸ் சூரிய ஒளி மின்சார உற்பத்தி பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் பாசன வசதிகள் பெறும்.
இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரம் குறித்து முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். மேலும் கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை தொடர்ந்து 26ம் தேதி திருச்சி செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள், முக்கொம்பு அணை கட்டும் பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளார்.