மகளுடன் ஆற்றில் விழுந்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதக் மாவட்டத்தில் உள்ள கொலே ஆலூரு கிராமத்தில் சங்கமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு உமாதேவி என்ற மனைவியும், 4 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகள் தார்வாரில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சங்கமேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இதனால் உமாதேவியுடன் தனது மகள்களான தனுஸ்ரீ, பிரியங்கா மற்றும் 4 வயது பெண் வசித்து வந்தனர். இதற்கு முன்பாக சங்கமேஷ் அப்பகுதியில் புதிதாக கட்டி வந்த வீட்டிற்காக பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது.
எனவே கணவரை இழந்து தவிக்கும் உமாதேவி 4 பிள்ளைகளையும் வளர்க்க சிரமப்பட்டு வந்த நிலையில் அவரால் அந்த வீட்டை கட்ட முடியவில்லை. இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி தனது 3 மகள்களையும் உமாதேவி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மல்லபிரபா ஆற்றுக்குச் சென்ற உமாதேவி தனது 3 மகள்களுடன் அங்கு விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது ஆற்றில் குளிக்க வேண்டாம் என தனுஸ்ரீ கூறியும் உமாதேவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் தனுஸ்ரீ, தனது சகோதரி பிரியங்காவுடன் அங்கிருந்து சென்றுவிட்டார். ஆனால் தனது 4 வயது மகளுடன் உமாதேவி ஆற்றில் விழுந்து விட்டார். இதுகுறித்து தனுஸ்ரீ கிராம மக்கள் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைதொடர்ந்து கிராம மக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உமாதேவியை மயங்கிய நிலையில் மீட்டனர். இவ்வாறு மீட்கப்பட்ட உமாதேவியை தீயணைப்புதுறை வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உமாதேவிக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் 4 வயது மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் சிறுமியைத் தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறை வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.