இஸ்ரேல் படையுடன் நாட்டுடன் நடந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. பல வருடங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் பலர் பலியாகியுள்ளனர். பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் என்ற அமைப்பு இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இஸ்ரேல் அரசு, அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக கூறி அழித்துவிட முயன்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மேற்கு கரையின் காசா முனையிலிருந்து இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இந்த வருடத்தில் மட்டும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நடந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 150 நபர்களும், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 31 நபர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் யோசேப்பின் கல்லறைக்கு யூதர்களை அழைத்துச் செல்ல இஸ்ரேல் படையினர் அந்த நகரத்திற்குள் சென்றார்கள். அந்த சமயத்தில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது. இந்த மோதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அகமத் டராக்மே என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இந்த மோதலில் அந்த இளைஞர் பங்கேற்றாரா? என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.