கோவையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் போதிய மழை பெய்யாததால் குளங்கள் வறண்டதுடன், ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டன. எனவே மழை பெய்யாதா என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
அதன்பின் பிற்பகல் 1 மணியளவில் கோவை மாநகர பகுதி மற்றும் வடவள்ளி, துடியலூர், கணபதி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் மழைநீர் ஆறாக ஓடியது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், பள்ளிகளுக்கு சென்று திரும்பிய மாணவ-மாணவிகள் என பலரும் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினார்கள். இந்த மழை காரணமாக கோவையில் வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.