Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சாவில் ஏதோ மர்மம் இருக்கு” சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆராசூர் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலை ஆராசூர்-தென்சேந்தமங்கலம் செல்லும் சாலையில் பாலத்தில் அமர்ந்து கொண்டு தனது நண்பர்கள் விநாயகம், மூர்த்தி ஆகியோருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது ஏழுமலை பாலத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்து ஏழுமலையின் நண்பர்கள் அவரது மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன் குமரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் உறவினர்களுடன் சென்று ஏழுமலையை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு ஏழுமலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் மருத்துவமனை எதிரில் ஏழுமலையின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |