செம்மஞ்சேரி தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வேலு என்பவர் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவரை அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி தலைமையில், தனிப்படையினர் அங்கு இருக்கக்கூடிய சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதில் அவர்கள் சேட்டு உட்பட 6 பேர் என தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கின்ற கொட்டைசப்பி சுரேஷ் தனது கூட்டாளிகள் மூலம் கடந்த 16-ஆம் தேதி சேட்டுவின் அண்ணனான வடிவழகன் என்பவரை சென்னை சேத்துப்பட்டில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். எனவே வடிவழகனை கொலை செய்ததில் கொட்டைசப்பி சுரேஷிற்கு முக்கிய பங்கு இருப்பதால் பழி தீர்த்துக் கொள்வதற்காக அவரது மாமனான வேலுவை, சேட்டு அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சேட்டு கடந்த வருடம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.