பாலியல் ரீதியான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் பாலியல் நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த நகரில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் விதமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் அதிகமாக இளைஞர்களே புதியதாக துணைகளை நாடுகின்றனர் என்றும் பாலியல் செயல்பாட்டில் அதிகம் இருப்பவர்கள் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
இதனால் அவர்களிடத்தில் பாலியல் ரீதியான நோய்கள் குறித்து அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதனால் ஏற்படும் ஆபத்தை புரியவைப்பதற்கும் இந்த புதிய முயற்சியானது கைக்கொடுக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை எளிதில் கண்டறிய முடியாது. மேலும் இந்நோயானது வேகமாக பரவும் தன்மை உடையது என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக சூரிச் நகரில் எச்.ஐ.வி, சிபிலிஸ், கிளமிடியா, கோனோரியா மற்றும் ஹெபடைடிஸ் போன்ற பாலியல் ரீதியான நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அதிலும் இந்த நோய்களுக்கான பரிசோதனைக்காக 160 பிராங்குகள் சுகாதார காப்பீட்டு நிறுவனத்தால் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இலவச பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வருகின்ற 2022 முதல் 2025 வரை இந்த இலவச திட்டமானது அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.