பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொண்டமானூர் கிராமத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விவசாய நிலத்தில் மணிலா பயிர்களை குரங்குகள் சேதம் செய்து வருவதால் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜதுரை என்பவர் அந்த பெண்ணை புதர் பகுதிக்கு இழுத்து சென்று வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அந்த பெண் கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி ஓடி வந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ராஜதுரையை மடக்கிப்பிடித்து வாணாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அந்த பெண்ணை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.