2019 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில் பாதிக்கும் மேலானவை பாலியல் வன்கொடுமை தொடர்புடையவை என்பது தெரியவந்துள்ளது.
2019ம் ஆண்டில் நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் 102 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தான், அதிகமாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 13 பேருக்கும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 12 பேருக்கும், மத்திய பிரதேச மாநிலத்தில் 11 பேருக்கும் , கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
கேரளாவில் 5 பேருக்கும், தமிழ்நாட்டில் 4 பேருக்கும், தெலங்கானாவில் 2 பேருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது புள்ளிவிவரங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கிறது.பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றங்களுக்கு அதிக அளவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதும், இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
குறிப்பாக பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றத்திற்காக 54 பேருக்கும், கொலை செய்த குற்றத்திற்காக 28 பேருக்கும், பயங்கரவாத தொடர்புடைய குற்றங்களுக்காக 9 பேருக்கும், மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
வழிப்பறி கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு கொலை செய்த குற்றத்திற்காக 6 பேருக்கும், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு கொலை செய்த குற்றத்திற்காக 5 பேருக்கும், விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த குற்றத்திற்காக 54 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, இதில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களும் வெளியாகியுள்ளன.
இந்த 40 வழக்கிலும் பாதிக்கப்பட்டோர் 12 வயதுக்கும் குறைவான சிறுமியர் என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 2019ம் ஆண்டில் தான் விசாரணை நீதிமன்றங்கள் குறைந்த அளவில் மரண தண்டனையை வழங்கி இருப்பதும் தெரியவந்து உள்ளது.
அதே நேரம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதும், 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த ஆண்டில் தான் அதிகம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு போக்சோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்கலாம் என திருத்தம் கொண்டுவந்து இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.