மாணவ-மாணவியர்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகூடங்களின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் என அனைவரும் மாவட்ட காவல்துறையுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டமானது ஊட்டியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு காவல்துறை கண்காணிப்பாளரான ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளரான மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனரான ஆஷா மனோகரி போன்றோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் கூறப்பட்டதாவது ‘பள்ளி, கல்லூரிகளில் முறையான வழிகாட்டுதலுக்காக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அதிலும் மாணவ-மாணவியருக்கு ஏற்படும் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளைத் தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கும் முகாம்கள் அமைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ- மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக எளிமையான முறையில் புகார்கள் அளிக்கவும் முக்கியமாக அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.