பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் நல சங்கம் சார்பாக கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது. அதன்பின் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை எந்த வித பாதுகாப்பு குளறுபடியும் இன்றி பள்ளிகளை நடத்தி வந்தோம்.
ஆனால் கடந்த 1-ம் தேதி முதல் வருகின்ற 31-ஆம் தேதி வரை கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், சுழற்சி முறையிலும், 50 சதவீத இருக்கைகளுக்கு மிகாமலும் பள்ளிகள் நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.