பள்ளி வளாகத்திற்குள் நடைபெறும் சமூக விரோத செயல்களைத் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி கவுண்டன் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த பள்ளி மூடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பாதுகாப்பாக கேட் அமைக்கவில்லை. இந்நிலையில் பகல் நேரத்தில் அந்த பள்ளியில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது இருசக்கர வாகனத்தில் பள்ளி வளாகத்திற்குள் தினமும் ஏராளமானோர் வந்து செல்வதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து யாராவது தட்டிக் கேட்டால் அந்த நபர்கள் பொதுமக்களுடன் தகராறு செய்கின்றனர். எனவே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பள்ளி வளாகத்திற்குள் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.