பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் துட்டம்பட்டி ஊராட்சி வனிச்சம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி இருக்கிறது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாத அந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் பழனிசாமி என்பவர் மதுபோதையில் வந்தார். அப்போது பள்ளிக்கு வந்த பார்வை குறைபாடுள்ள 5-ம் வகுப்பு மாணவிக்கு பழனிச்சாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மாணவியின் சத்தம் கேட்டு வந்த தலைமை ஆசிரியர் செல்வம் உட்பட ஆசிரியர்கள் மதுபோதையில் இருந்த பழனிச்சாமியை அங்கிருந்து வெளியேற்றினர். அதன்பின் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின்படி பெற்றோர் பள்ளிக்கு வந்து மாணவியை அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்காத தலைமையாசிரியர் மீது நடவடிக்கை வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருமை ஆறுமுகம் காவல்துறையினரிடம் கூறினார். இது தொடர்பாக ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.